டெல்லியில் விமானப்படை கமாண்டர்களின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படையின் சிறப்பான செயல்பாடுகளுக்கும், தன்னார்வப் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். கிழக்கு லடாக்கில், தற்போதைய சூழலில் இந்திய விமானப்படை முன்னணியில் நிறுத்தப்பட்டிருப்பது, எதிராளிகளுக்கு வலுவான செய்தியைத் தெரிவிப்பதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றத்தை தணிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். பாதுகாப்புப் படைகளின், நிதி மற்றும் பிற தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.