ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவி மனிஷா, 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆங்கிலம், வரலாறு, சமஸ்கிருதம், உளவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும், ஹிந்தியில் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 99.8% மதிப்பெண்களுடன் கலைத்துறையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மனிஷா தினமும் 2 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். மாணவியின் தந்தை மனோஜ் குமார் விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே மாணவி மனிஷாவின் விருப்பம். தனது வெற்றி குறித்து மனிஷா கூறுகையில், ‘நான் இந்த நிலையை அடைந்ததற்கு பெற்றோரின் ஆதரவுதான் காரணம். குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பள்ளியில் முதலிடன் பெறுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் முதலிடத்தை பிடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. மாணவர்களை விட மாணவிகளால்தான் அதிகம் சாதிக்க முடியும் என்ற மனநிலையை மக்கள் மாற்ற வேண்டும்’ என கூறியுள்ளார்.
அரசுப் பள்ளியில் படித்து சாதனை படைத்துள்ள மாணவிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். தடைகளை உடைத்து அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கும், குடும்பத்தினருக்கும் பெருமையை தேடி தந்துள்ள மாணவிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
12ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு 74.48% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 80.34% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். ஹரியானாவில் கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். 86.30% மாணவிகளும், 75.06% மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர்.