மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10.69 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பன்னா மாவட்டம் அதிக வைரம் கிடைக்கும் பகுதியாக அறியப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலங்கள் குத்தகைக்கு எடுத்து வைரம் தோண்டும் வேலைகளை பலர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள ராணிப்பூர் பகுதியில் உள்ள சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்த ஆனந்திலால் குஷ்வாஹா என்பவர் ஆட்களை விட்டு வைரம் தோண்டும் பணியில் கடந்த 6 மாதங்களாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே அவரின் கடின உழைப்புக்கு பலனாக சுமார் 10.69 காரட் வைரத்தை கண்டுபிடித்துள்ளார். மேலும் இதை தற்போது உள்ளூர் வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள உள்ளூர் வைர அலுவலக அதிகாரி, இந்த வைரம் முதலில் ஏலம் விடப்படும் என்றும் அதில் வரும் வருமானம், அரசு ராயல்டி மற்றும் வரிகளை கழித்த பின்னர் வைப்புத்தொகையாளருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையே வைரத்தின் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றாலும், அதன் தரத்தின் அடிப்படையில் ரூ.50 லட்சம் வரை பெற முடியும் என்று உள்ளூர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.