கல்வான் மோதலில் உயிரிழந்த தெலங்கானா வீரரின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கி மாநில அரசு கவுரவித்துள்ளது.
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்தந்த மாநில அரசுகள் இழப்பீடு அறிவித்தன. கல்வான் மோதலில் உயிரிழந்த வீரர்களில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர். அவர் 2004ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தெலங்கானா அரசு, கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியை துணை ஆட்சியராக நியமித்துள்ளது. இதற்கான பணிக்கான நியமன ஆணையை முதல்வர் சந்திரசேகர் ராவ், சந்தோஷியிடம் வழங்கினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த இலவச வீட்டிற்கான ஆவணங்களையும் ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் ஸ்வேதா மொஹந்தி வழங்கியுள்ளார்.
சந்தோஷிக்கு 8 வயது மகளும், 4 வயது மகனும் இருக்கின்றனர். அதனால் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே அவருக்கு பதவி வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். புதிய பணிக்கு அவருக்கு முறையான பயிற்சி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, ஜூன் மாதத்தில் கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு தெலங்கானா மாநில அரசின் குரூப் 1 பணி வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் வீரரின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில், அவரது குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.