கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், மருத்துவமனை ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், பலருக்கும் போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என நினைக்கும் மக்கள், தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸை கொளுத்தி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி பகுதியை சேர்ந்த 55 வயதான நோயாளி ஒருவர் கடுமையான மூச்சுத்திணறலால் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியானது. ஆனால் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மருத்துவமனையில் அலட்சியத்தால்தான் நோயாளி உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த ஆத்திரத்தில் மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸை தீயிட்டு அவர்கள் கொளுத்தினர். மேலும் மருத்துவமனை மீது கல் வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் சம்பவ இடத்தில் இருந்த ஒரு காவலர் காயமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், பலரது உயிரையும் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆம்புலன்ஸை கொளுத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.