மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டமையினை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்ட்டது.
வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இணைந்து தங்களுக்கு நியாயம் வேண்டியும் குற்றவாளிகளுக்கு நீதி மன்றம் சரியான தீர்ப்பு வழங்ககோரியும் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டனர்.
மேற்படி போராட்டமானது வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
‘வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்’, ‘சுகாதார சேவைக்கு மதிப்பு வழங்குங்கள்’, ‘குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுமா’, ‘அரச ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்’ என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
சுமார் ஒரு மணிதியாலம் இடம்பெற்ற பணி பஸ்கரிப்பினால் வைத்தியசாலை நிர்வாகத்தில் முடக்கநிலை ஏற்பட்டது. இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஏனைய வைத்தியசாலை பிரிவுகளில் தடங்கல் ஏற்பட்டு மருத்துவ சேவையும் தடைப்பட்டு காணப்பட்டது.
வியாழக் கிழமை காலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை பார்வையிட சென்ற உறவினர்களுக்கு குறித்த பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரால் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான அறிவுறுத்தல் விதிகளுக்கு அமைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு சாராருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாட்டினால் உத்தியோகஸ்த்தர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட 3 உத்தியோகஸ்த்தர்கள் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 நபர்கள் சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.பொலிசரின் சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி அவர்களை பிணையில் செல்ல பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.