சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிந்தாவாகு ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்களின் சமையல் அண்டாவில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரின் மாவட்டத்தில் உள்ள மினகபள்ளியில் வசிக்கும் ஹரிஷ் யலமின் கர்ப்பிணி மனைவி லட்சுமி என்பவர் மினூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி வரத்தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உறவினர்கள் ஒன்றினைந்து லட்சுமியை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் அப்பகுதியில் கரைபுரண்டோடும் சிந்தாவாகு ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இறந்த நிலையில் பிறந்த குழந்தை:
இங்கு முறையான பாலம் இல்லாததால் கர்ப்பிணியான லட்சுமியை சமையல் அண்டாவில் வைத்து ஆற்றை கடந்து போபால்பட்டணம் சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர்.
இதனை அடித்து லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசவத்துக்கான நேரம் வரவில்லை என அலட்சியமாக கூறி விட்டு சென்றுள்ளனர். இதனால் அடுத்த ஷிப்ட்டுக்கு மருத்துவர்கள் வரும் வரை லட்சுமி வலியால் துடித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள போபால்பட்டினத்தின் மருத்துவ அதிகாரி அஜய் ராம்தேக், இது தொடர்பாக மருத்துவர் மற்றும் செவிலியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பிரசவ வழியில் துடித்த பெண்ணையையும் குழந்தையையும் காப்பாற்ற பல இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.