பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியாவில் குடியேற முயற்சிக்கும் ஆப்கானிஸ்தான் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையின மக்களுக்கு தேவையான விசா ஏற்பாடுகள் செய்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. இங்குள்ள பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது நடத்தும் தாக்குதல் சம்பவங்களுக்கு அந்நாடுகளில் வசித்துவரும் இந்து மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் தொடர்ந்து இறையாகி வருகின்றனர்.
இதனிடையே பயங்கரவாத அச்சுறுத்தல்களை சந்தித்துவரும் மக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மையின மக்கள் இந்தியாவில் குடியேற வழிவகை செய்கிறது.
இந்நிலையில் சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையின மக்களின் மீதான தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களுக்கான விசா ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, ஆப்கானிஸ்தானில் இந்து மற்றும் சீக்கிய சமூகங்கள் மீதான தாக்குதல்களில் சமீபத்தில் தீவிர நிலையை எட்டியுள்ளது. இந்த தாக்குதல்கள் பயங்கரவாதிகளால் அவர்களின் வெளி ஆதரவாளர்களின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சிறுபான்மையின சமூகங்களிடம் இருந்து நாங்கள் கோரிக்கைகளை பெற்று வருகிறோம், அவர்கள் இந்தியா வர விரும்புகிறார்கள், அவர்கள் இங்கு குடியேற விரும்புகிறார்கள். தற்போதைய கோவிட்-19 நிலைமை இருந்தபோதிலும், நாங்கள் இந்த கோரிக்கைகளுக்கு வசதி செய்து வருகிறோம், என தெரிவித்தார்.
காபூலில் உள்ள இந்திய தூதரகம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டிற்கு வர விசா வழங்கி வருகிறது. “அவர்கள் இங்கு வந்தவுடன், அவர்களின் கோரிக்கைகள் ஆராயப்பட்டு நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் செயல்முறை படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்