டெல்லியில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமியை 19 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி இருந்து வருகிறது. இங்கு இதுவரை 1,26,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3,719 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அம்மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. அதன்படி சுமார் 10,000 பேர் சிகிச்சை பெறும் வகையில் சர்தார் படேல் கொரோனா மருத்துவமனை திறக்கப்பட்டு அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெற்கு டெல்லியின் சதர்பூரில் உள்ள சர்தார் படேல் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி, அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி கடந்த 15 ஆம் தேதி குளியலறைக்கு செல்லும்போது அவரை பின் தொடர்ந்த 19 வயதான இளைஞர் அவரது நண்பரின் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தை சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றொரு கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார் எனவும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள 2 இளைஞர்களும் வேறு மையத்திற்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டெல்லி சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள மக்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற ஏதுவாக சுமார் 10,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சர்தார் பட்டேல் கொரோனா மருத்துவமனை திறக்கப்பட்டு 20 நாட்களே ஆன நிலையில் அங்கு ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் டெல்லி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.