தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், தொண்டரின் மனைவியிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதால், அதற்கு மன்னிப்பு கேட்கும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அ.தி.மு.க.வில் பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளராகவும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மனைவி அமுதா. ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
கொஞ்சம் அரசியல் செல்வாக்கும் உள்ள ஜெகநாதன், சமீபத்தில், அதிமுக தொண்டரின் மனைவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, வீட்டின் உள்ளே சென்று அவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.
இதனால் இது குறித்து பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, திடீரென்று அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றார்.
ஜெகநாதன் ஆள் வைத்து மிரட்டியதன் காரணமாகவே அவர் வாபஸ் வாங்கிவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பிரபல தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 10-ஆம் திகதி அந்த தொண்டரின் வீட்டின் அருகே ஏர்வாடி பஞ்சாயத்து நிதி சார்பில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக போர்வெல் போடும் பணிகள் நடந்தது.
இந்த பணிகளை பார்ப்பதற்காக ஜெகநாதன் மற்றும் அதிமுகவை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.

அப்போது அந்த தொண்டரின் வீட்டின் பின்புறம், ஜெகன்நாதன் மற்றும் உடன் வந்தவர்கள் மது அருந்தியுள்ளனர். அதன் பின் ஜெகன்நாதன் மதுவிற்கு சைடு டிஷ் வாங்கி வருவதாகக் கூறி, அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தார்.
நுழைந்தவுடன், பனமரத்துப்பட்டி சேர்மன் நான்தான். அரசாங்கம் கொடுக்கும் இலவச தொகுப்பு வீட்டை உனக்குத் தருகிறேன்.
உன்னை என் பொண்டாட்டி மாதிரி வச்சு காப்பாத்துறேன் என்று கூறிக் கொண்டே, திடீரென்று ஜெகநாதன் அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக ஓடிச் சென்று தன்னுடைய இரண்டு பிள்ளைகளை அரவணைத்தபடி நின்றுள்ளார்.
அந்த பெண், நீங்கள் எனக்கு அப்பா மாதிரி என்று கூறி போய்விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெகன்நாதன் சரி நான் இப்போது போகிறேன், ஆனால் நான் கூப்பிடும் போது எல்லாம் நீ வர வேண்டும், வருவேன் என்று சத்தியம் செய் என்று கேட்டுள்ளார்.
அந்த பெண்ணும் அப்போதைய சூழ்நிலையில் சரி என்று சத்தியம் செய்துள்ளார். அதன் பின் இந்த விஷயத்தை இரண்டு நாட்கள் சொல்ல முடியாமல் தவித்த அவர், கணவரிடம் கூற, உடனே அவர் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின் ஜெகன்நாதன், அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பின்னரே அந்த பெண்ணின் கணவர் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இது குறித்து அந்த பெண்ணின் கணவர், ஜெகநாதன், தப்பு செய்துவிட்டதாகச் சொல்லி எங்கள் இருதரப்பிலும் மத்தியஸ்தம் பேசிய ஒருவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டார். இதனால், நானும் மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று வாபஸ் வாங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜெகன்நாதன், குறித்த பெண்ணின் கணவரிடம் என்னை மன்னித்துவிடு என்று போனில் கெஞ்சிய வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இவரை அங்கிருக்கும் ஊர் மக்கள் ஒரு பிளே பாய் என்றும் கூறி வருகின்றனர்.



















