அமெரிக்கா – சீனா இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் என்ற பெயரில் வந்த, சீன ராணுவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, 25 நகரங்களில் எப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே ஏற்கனவே வர்த்தக விவகாரத்தில் மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள சீன துாதரகத்தை மூடும்படி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் உள்ள அமெரிக்க துாதரகத்தை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்காக மாணவர் விசாவில் வந்த நான்கு பேருக்கு சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் மூன்று பேரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன துாதரகத்தில் தஞ்சமடைந்தவரும் கைது செய்யப்பட்டார்.
இதில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்காக மாணவர் விசாவில் வந்தவர்கள் குறித்த பின்னணி விசாரிக்கப்பட்டது.
அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் சீனாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு அந்த நாட்டு ராணுவத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மாணவர் என்ற பெயரில் உளவு பார்க்கவும் அமெரிக்காவின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் இவர்களை சீன ராணுவம் அனுப்பியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளோம். ஒருவர் சீன துாதரகத்தில் தஞ்சமடைந்தார்.
அவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இதுபோல பொய் தகவல்களை கூறி அல்லது மறைத்து அமெரிக்கா வந்துள்ள சீனர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக 25 நகரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சீனாவுக்காக உளவு பார்த்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த டிக்சன் யுயோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கே தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறும் அவர், ஆனால் சீனாவுக்காக உளவு பார்க்கவில்லை என மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.