இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுறும் வேட்பாளரை எந்த மாவட்டத்திலிருந்தும் தேசிய பட்டியலுக்கு பரிந்துரை செய்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட், டெலோ போன்றன (சம்பந்தன் உட்பட அனைவரும்) ஒருமித்த முடிவெடுத்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலவேளை சிலர் தோல்வியுற்றால் தேசிய பட்டியல் ஊடக நாடாளுமன்றம் செல்லாம் என்ற கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இவ்வாறானதொரு முடிவினை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் மக்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகவும் ஏனைய 29 பேர் கட்சி பெறும் வாக்குகளுக்கு அமைய தேசியப் பட்டியல் ஆசனங்களாக வழங்கப்படுவதுமே விகிதாசார தேர்தல் முறையின் மரபாக இருக்கிறது.
இத்தேசிய பட்டியல் முறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை கட்சிக்குள் உள்வாங்குவதே.
கடந்த காலங்களில் இவை பின்பற்றப்படாவிட்டாலும் எதிர்வரும் தேர்தலில் இது முழுமையாக பின்பற்றப்படும் எனவும் தோற்றவர் யாராக இருப்பினும் அவர் தோல்வியுற்ற வேட்பாளராகவே கருதப்படுவாரே ஒழிய அவருக்கு எந்தவொரு நியமனத்தையும் கட்சி வழங்காது கடந்த காலங்களை விட கட்சி தனி நபர்கள் அல்லது தனி மனிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்காது கூட்டு பொறுப்புள்ள கட்சியாக செயற்படும் எனவும் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகியொருவர் குறிப்பிட்டுள்ளார்.