எதிர்வரும் பேரினவாத அரசுடன் பேரம் பேசும் சக்தியினை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கம் தான் நிற்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேரினவாத அரசுதான் அமையுமென அடிக்கடி கூறிக் கொள்கின்றீர்கள், கடந்த அரசுக்கு நல்லதொரு ஆதரவு மட்டுமல்ல மூன்று தடவைகள் அந்த அரசினைக் காப்பாற்றியிருந்தீர்கள், கடந்த முறை 20,22 ஆசனங்களை வைத்திருந்த போது கூட பெற முடியாத தீர்வினை, மக்களைப் படுகொலை செய்த பேரினவாத அரசிடமிருந்து எவ்வாறு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியுமென மாவை. சேனாதிராஜாவிடம் வினப்பட்டது.
அதற்கு, அது வேறு, இது வேறு நாங்கள் எந்தவொரு அரசுடனும் பலமாகத் தான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கின்றோம், கடந்த அரசினைப் போல இனிவரும் அரசு அமையாது. அது மக்களுக்கும் நன்றாகவே தெரியும், ஆகவே தான் நாங்கள் இன்னும் எமது பலத்தினை வெளிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
இன்ற பல சில்லறைக் கட்சிகள் ஆசனங்களை பெற போட்டியிடுகின்றன, நாங்கள் பலமாக இருக்க வேண்டும் அதற்காகத் தான் நாங்கள் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என கூறுகின்றோம் என பதிலளித்தார்.
ஆலைமரம் போல் வியாபித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பிளவுபட்டு இருக்கின்றமைக்கான காரணம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
நாங்கள் பிரிந்திருக்கின்றோம், பிரிக்கப்பட்டு இருக்கின்றோம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, மக்கள் அதனைத் தவறாகப் பார்க்கின்றார்கள்.
ஊடகங்கள் தான் திரிவுபடுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றார்கள், அதனையும் நாங்கள் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றோம், தலைமையாக வேண்டும் என்பதற்காகவே பிரிந்து சென்றார்களே தவிர தாங்கள் பிரிக்கவில்லை என்பதே உண்மை என அவர் தெரிவித்திருந்தார்.