கொரோனா வைரஸ் இப்போதைக்கு உலகை விட்டுப் போகாது. அதனால் நாம் அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பற்றிய நேர்காணல் ஒன்றை நாமல் ராஜபக்ஷ வழங்கினார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் இப்போதைக்கு உலகை விட்டுப் போகாது. அதனால் நாம் அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் வர்த்தக நிலையங்களையும் பாடசாலைகளையும் தொடர்ந்து மூடி வைத்திருக்க முடியாது. ஆனால் அவற்றைத் திறப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் நாம் எமது அரசியல் செயற்பாடுகளை மூன்று நாட்கள் நிறுத்தி வைத்த பின்னர் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உடன்பட்டே மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எம்மாலான அனைத்தையும் நாம் செய்திருக்கிறோம். உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை பற்றிய ஆபத்து இருந்தது. இதனால் எமது விமான நிலையத்தை திறப்பது கூட ஆபத்தாகத்தான் இருந்தது.
ஹம்பாந்தோட்டை மக்கள் ராஜபக்ஷக்கள் மீது நூறு வருட காலம் நம்பிக்கை வைத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை என் தந்தையின் கோட்டை ஹம்பாந்தோட்டை மக்களுக்கு ராஜபக்ஷக்கள் வழங்கியுள்ள வசதிகளைப் போல் எவரும் வழங்கியதில்லை.
சஜித் பிரேமதாச அங்குள்ள காடுகளை அழித்து வீட்டுத் திட்டங்களை மட்டும் உருவாக்கினார். கடந்த ஐந்து வருடங்களாக அங்கு வீதிகள் மற்றும் மின்சாரம் இல்லை. பாடசாலை கட்டடம் ஒன்று கூட அங்கு நிர்மாணிக்கப்படவில்லை. இவை அனைத்துக்கும் சஜித் பிரேமதாசதான் பொறுப்புக் கூற வேண்டும். என்றார்.