வடக்கு –தெற்கு, கிழக்கு – மேற்கு போன்று மலையகத்தையும் இணைத்து அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புகளை விரைவில் நிறைவு செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஐந்து வருட காலத்தை வீணடித்தமை தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் முழு பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மரதகஹமுல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
“வாகன நெரிசல் காரணமாக வீதியில் செலவிடும் நேரத்தை சேமித்து, அந்த காலத்தை இன்னும் பிரயோசனமான வேலையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் வடக்கு – தெற்கு – கிழக்கு – மேற்கு போன்று மலையகத்தையும் இணைத்து அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புகளை விரைவில் நிறைவுசெய்யப்படும்.
நாடொன்று முன்னோக்கி பயணிக்க வேண்டுமாயின் அபிவிருத்தி முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், அதற்கு அவசியமான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயங்காது ஈடுபடுவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
அதன் கீழ் கிராம மட்டத்திலிருந்து நகரங்கள் வரையும், மாகாண மட்டடம் வரையும், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையை விரைவில் நிர்மாணித்து நிறைவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
2015ஆம் ஆண்டு வரை தமது அரசாங்கம் முன்னெடுத்து சென்ற அபிவிருத்தி செயற்பாடுகளை கடந்த ஐந்து வருடங்களில் முழுமையாக நிறுத்தியதுடன், கடந்த ஐந்து வருடங்களை வீணடித்தமை தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புகூற வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சந்திப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.



















