ஒரு இனம் தனது பொருளாதார கட்டமைப்புகளில் பலமாக இருக்கின்ற போதே அந்த இனத்தின் இருப்பும் பாதுகாக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அதாவது ஒரு தேசிய இனத்தின் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அந்த இனம் தனது பொருளாதாரத்தில் மிகவும் பலமாக இருக்க வேண்டும். இனத்தின் பொருளாதாரம் சிதைக்கப்படும் போது இருப்பும் சிதைக்கப்பட்டுவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி உதயநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியல் பிரச்சினை தொடக்கம் வாழ்க்கைப் பிரச்சினை வரையில் ஏராளம் பிரச்சினைகளுக்கு மக்கள் முகம்கொடுக்கின்றனர், எல்லாமே முக்கியமானவை.
அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் கல்வியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு, வளப்பகிர்வில் உள்ள பாரபட்சங்கள், குறைபாடுகள், சூழல்பாதுகாப்பு, எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றுக்குத் தீர்வுக் காணாமல் இருக்க முடியாது.
முதலில் நாம் எமது மக்கள் எதிர்கொள்கின்ற இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணவேண்டும். இதுவே இனத்தின் இருப்பை தக்க வைக்கும்.
இவை எல்லாவற்றுக்கும் மிக விரைவான முறையில் தீர்வைக் காண வேண்டும். தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் பிரச்சினைகளுடன் வாழ வைக்கமுடியாது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலமே எமது மக்களை வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி நகர்த்த முடியும்.
எமது மக்களின் வளர்ச்சியே எமது இனத்தைப் பாதுகாப்பதற்கு வலுவைக் கொடுக்கும். எமது தேசிய அடையாளத்தைப் பாதுகாக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















