தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
மாண்புமிகு அம்மாவின் அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
இதனால் நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும் ” என்று கூறப்பட்டுள்ளது..