வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3.11 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியர்களை மீட்கும் பொருட்டு வந்தே பாரத் மிஷனின் கீழ் மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு சவுதி அரேபியாவில் இருந்து வந்த நபர்கள் சுமார் 3.11 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று நேற்று மாலை தரையிரங்கியுள்ளது. இதனை அடுத்து வெளியே வந்த பயணி ஒருவரிடன் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரிடம் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவருடன் தொடர்புடைய 11 பேரிடன் நடத்திய சோதனையில் சுமார் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3.11 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள் 11 பேரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.




















