கென்ய நபர் ஒருவர் அடர்நிற உடைகள் மற்றும் அதற்கேற்ற தொப்பிகள், முகக்கவசங்கள் அணிவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா பாதிப்பால் முகக்கவசமும் நமது வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. நாம் வெளியே செல்லும் போது பர்ஸ் உள்ளிட்ட தேவையான பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்வோம். இனி அந்த பட்டியலில் முகக்கவசத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் முகக்கவசத்தை சுமையாக நினைக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அதனையே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். விதவிதமாக முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் முகக்கவசத்தை மையப் பொருளாக வைத்த ஃபேஷன் ஷோக்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் கென்யாவில் 59 வயதான ஜேம்ஸ் மைனா மவாங்கி என்பவர் முகக்கவசத்தின் மூலம் பிரபலமடைய ஆரம்பித்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் பரபரப்பான இடங்களில் கூட இவர் தனியாக தெரிவார். அதற்கு காரணம் அவரது பிரகாசமான வண்ண உடைகள் மற்றும் தொப்பிகள். குறிப்பாக முகக்கவசம் பயன்பாடு அதிகரித்த பிறகு அவரது ஆடைகள் அனைவரது கண்களையும் கவர ஆரம்பித்து விட்டது.
தனது உடைகளுக்கு ஏற்ற நிறத்தில் முகக்கவசத்தை வடிவமைத்து அணிந்து வலம் வருகிறார். இதுதொடர்பாக அவர் பேசும் போது, ‘மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக தெரிவதற்கான அனைத்து நிறங்களையும் கடவுள் எனக்கு காட்டினார். வறுமை காரணமாக 12 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தினேன். சிறுவயதில் என்னிடம் ஒரு சட்டை மட்டுமே இருந்தது. அதனை தினமும் துவைத்து பயன்படுத்தினேன். பலரும் என்னை பார்த்து சிரித்தனர். ஆனால் ஒருநாள் அவர்கள் மதிக்கும் இடத்தில் நான் இருப்பேன் என நினைத்தேன். தற்போது 160 உடைகள், 200 ஷூக்கள், 300 தொப்பிகள் வைத்திருக்கிறேன். தேவைப்படுபவர்களுக்கு இதுபோன்ற ஆடைகளை வடிவமைத்து கொடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.