நடந்து முடிந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பினருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
கடந்த அரசாங்கத்தின் இரண்டு நிர்வாகங்கள் செயற்பட்டதால், நாட்டுக்கு நல்லது நடந்தது என்று மகிழ்ச்சியடைய முடியவில்லை .
இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டுக்கு நலன் பயக்கும் வகையிலான வெற்றிக் கிடைத்துள்ளது என எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைய முடியும். இந்த வெற்றியானது நாட்டு மக்கள் பெற்ற வெற்றியென கூற முடியும்.
அதிகாரம் கிடைத்து விட்டது என்று எண்ணி பழைய விதத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட்டால், நாட்டை உருவாக்க முடியாது.
நாட்டு மக்களின் பட்டினியை போக்கி நாட்டை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி அபிவிருத்தி செய்ய வேண்டும்.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் இலஞ்சம், கொள்ளை, மோசடி, ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும்.
நீங்கள் உங்களது கடமையை செய்யுங்கள் – நான் எனது கடமையை செய்வேன் என ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார். ஒரு முறையல்ல, இரண்டு முறை மக்கள் இதற்கான ஆணையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
சிறந்த எதிர்காலத்திற்காக மக்கள் தமது கடமையை செய்தது போல், ஜனாதிபதியும் தனது கடமையை செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.