கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 18 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்ணில் புதையுண்டவர்களில் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில், எப்போதுமே மழைக்கு பஞ்சம் இருப்பதில்லை. அளவுக்கு அதிகமான மழை காரணமாக அவ்வப்போது வெள்ளத்தால் பெரும் சேதங்களும் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டும், கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கன மழை கொட்டி வருகிறது. கன மழையால், இடுக்கி மாவட்டம் தற்போது ஆபத்தை சந்திக்கத் தொடங்கியுள்ளது.
இடுக்கி மாவட்டம் ராஜமலை என்ற பகுதியில் தேயிலை எஸ்டேட்டில், மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சர்வில் சுமார் 80 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்யும் கனமழையால் மண் இளகி, நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு, மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்ணுக்குள் புதையுண்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், அங்கு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.




















