எனது வன்னி மாவட்ட மக்களுக்கு அவர்களது தொழில்வாய்ப்பு, வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பணிகளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மத்தியிலிருந்து முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதுடன் எமது வன்னி மாவட்டத்தில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு என்னால் முடிந்தளவு செயற்படவும், பாடுபடவும் தீர்மானித்துள்ளேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
எனக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதையே எனது குறிக்கோளாய் கொண்டிருக்கிறேன்.
கடந்த காலங்களில் நாம் இதய சுத்தியுடன் மேற்கொண்ட பணிகள், சேவைகள் மற்றும் அபிவிருத்திகள் என்பவற்றிற்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக எனது இந்த வெற்றியை நான் நோக்கிய பொழுதும் இந்த வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைத்த எனது ஆதரவாளர்களையும் அன்பர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் இந்த களிப்பான சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
பல்வேறு வகையான போட்டிகள், சதிகள், கழுத்தறுப்புக்கள், குழி பறிப்புக்களுக்கு நடுவில் இந்த வெற்றி பெறப்பட்டிருப்பதை எனது ஆதரவாளர்களான நீங்கள் என்றும் மறந்து விடலாகாது.
இவ்வாறான கசப்பான உண்மைகள் மூலம் நாங்கள் புடம்போடப்பட்டிருப்பதுடன் இந்த அனுபவங்கள் மூலம் மேலும் பல அனுபவங்களை நாங்கள் கற்றறிந்திருக்கும் அதேவேளை எமது மக்களுடைய அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து அவர்களது தேவைகளை உணர்ந்து சேவையாற்ற நான் உறுதிப்பூண்டிருக்கிறேன்.
எனவே எனது வன்னி மாவட்ட மக்களுக்கு அவர்களது தொழில்வாய்ப்பு, வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பணிகளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மத்தியிலிருந்து முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதுடன் எமது வன்னி மாவட்டத்தில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு என்னால் முடிந்தளவு செயற்படவும், பாடுபடவும் தீர்மானித்துள்ளேன்.
இத்தேர்தலை மிகவும் நேர்மையான முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைத்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



















