தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நியமன விவகாரம் புதுபுது திருப்பங்களுடன் சர்ச்சையான நிலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அம்பாறையை சேர்ந்த த.கலையரசனிற்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இது நடந்து சில மணித்தியாலங்களில், அந்த முடிவு மாற்றப்பட்டு, தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய இறுதி நிலவரப்படி, தேசியப்பட்டியல் விவகார சர்ச்சையை தீர்த்து வையுங்கள் என, இரா.சம்பந்தன் அவசர கடிதமொன்றை மாவை சேனாதிராசாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று பின்மாலை பொழுதில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை மிக துல்லியமாக- எக்ஸ்குளூசிவ்வாக தமிழ்பக்கம் வாசகர்களிற்கு வழங்குகிறது.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. தேர்தலில் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார்.
மண்டை மேலிருந்த கொண்டை மறையவில்லை!
இந்த இடத்தில்தான் ஒரு இரகசிய கேம் ஆரம்பித்தது.
மாவை சேனாதிராசாவின் தோல்வியில், எம்.ஏ.சுமந்திரன்- சி.சிறிதரன் தரப்பின் பங்களிப்பும் குறிப்பிட்டளவில் உள்ளதாக, மாவை சேனாதிராசா தரப்பு கருதுகிறது. மாவை சேனாதிராசாவின் கூடாரத்தில் இருந்த பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை சுமந்திரன் தரப்பு உருவியெடுத்திருந்தது.
மாவை சேனாதிராசாவை தோற்கடிக்க சதி நடப்பதாக அப்பொழுதே மாவை தரப்பு அப்பொழுதே சுட்டிக்காட்டி வந்தது.
தேர்தல் முடிவு வெளியான மறுநாளே, எம்.எ.சுமந்திரன் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கட்சி தலைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்ற சாரப்பட கருத்து தெரிவித்தார். அதற்கு மறுநாள் சி.சிறிதரன் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கட்சி தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என அறிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் திடீனெ ஈருடல் ஓருயிராக மாறிய சுமந்திரன்-சிறிதரனின் இணையின் ஐக்கியத்தின் பின்னால், தலைமைப்பதவி குறித்த இணக்கப்பாடு இருப்பதாக ஊகிக்க முடிகிறது. அல்லது, தனது தேர்தல் வெற்றிக்கு உதவிய சிறிதரனிற்கு கைமாறாக, சிறிதரன் ஆசைப்படும் கட்சித் தலைமையை பெற்றுக்கொடுக்க சுமந்திரன் முன் கையெடுத்ததாகவும் கொள்ளலாம்.
நேற்று முன்தினம் (7) மாலை மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சுமந்திரன், சிறிதரன் இணை சென்றனர். மாவை சேனாதிராசாவின் நாடி பிடித்து பார்ப்பதே அவர்களின் நோக்கம்.
தேசியப்பட்டியல் தொடர்பான பேச்சை சுமந்திரன்- சிறிதரன் இணை எடுத்த போது, சசிகலா ரவிராஜூம் இருக்கிறார், அவரையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும் என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இதன்போதே, கனடா இறக்குமதியான குகதாசனை தேசியப்பட்டியலில் நியமிக்க சுமந்திரன்-சிறிதரன் கோரினர். மாவை மறுத்தார்.
நேர்மை தவறிய சம்பந்தன்
இரா.சம்பந்தனின் நேர்மையீனம் குறித்து தமிழ் அரசியலில் ஏராளம் கதைகள் உள்ளன. ஆனால், தமிழ் தேசியத்தின் பெயரால் அவரும் புனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நேற்று (8) பகல் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட இருவர் திருகோணமலைக்கு சென்று, இரா.சம்பந்தனை சந்தித்தனர்.
மாவை செனாதிராசாவிற்கே தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டுமென்பதை பங்காளிக்கட்சிகள் இரண்டும் ஆதரிக்கின்றன, கட்சியின் யாழ் மாவட்ட கிளையும் அந்த முடிவில் இருக்கிறது, கட்சியின் தலைவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவதே முறையானது என்பதை எடுத்துக் கூறினார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட சம்பந்தன், “மாவை சேனாதிராசா தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்ல விரும்புகிறாரா?“ என கேட்டார்.
ஆம் என பதிலளித்த சீ.வீ.கே.சிவஞானம், அந்த இடத்திலிருந்தே தனது தொலைபேசியில் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு, இரா.சம்பந்தனுடன் பேச வைத்தார்.
தேசியப்பட்டியலை ஏற்றுக்கொள்ள தயாரா என சம்பந்தன் வினவினார். மாவை ஆமென பதிலளித்தார்.
இதையடுத்து, அந்த தேசியப்பட்டியலை மாவைக்கு வழங்குவதென இரா.சம்பந்தன் உறுதியளித்தார்.
இதன்போது, சீ.வீ.கே.சிவஞானம் மேலுமொரு திட்டத்தையும் பரிந்துரைத்தார். “அம்பாறைக்கு தற்போது எம்.பி இல்லை. அதை சமாளிக்க வேறுவிதமாக செயற்படலாம். மாவை சேனாதிராசா முன்னர் அம்பாறையிலும் போட்டியிட்டுள்ளார். அந்த பகுதிக்கு பரிச்சயமானவர் அவர். அதனால் அவர் தேசியப்பட்டியல் எம்.பியான பின்னர், அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை தனது செயலாளராக பணிக்கமர்த்துவதுடன், தனது நிதி ஒதுக்கீடுகளை அம்பாறையில் செலவிடுவார்“ என்றார்.
சம்பந்தன் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்.
இரகசியமாக காய் நகர்த்திய சுமந்திரன், சிறிதரன்
சீ.வீ.கே.சிவஞானம் சென்று பேசிய தகவல்களை சுமந்திரன், சிறிதரன் தரப்பு அறிந்து கொண்டது. மாவை சேனாதிராசா எம்.பியாகினால், அவரை கட்சி தலைமையிலிருந்து அகற்றுவது சிரமமாகி விடும். அதனால் எப்பாடு பட்டாவது அவருக்கு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைப்பதை தடுத்து நிறுத்தி விட வேண்டுமென்று, உடனடியாக திருகோணமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று இரவு வரை சம்பந்தன் வீட்டில் தங்கியிருந்த இருவரும், மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கக்கூடாது, கனடா குகதாசனிற்கு வழங்க வேண்டுமென நச்சரித்தபடியிருந்தனர். ஆரம்பத்தில் இரா.சம்பந்தன் இதை நிராகரித்தார். எனினும், தொடர் நச்சரிப்பையடுத்து, மாவைக்கும் இல்லை, குகதாசனிற்கும் இல்லை… அம்பாறைக்கு வழங்கலாம் என்ற முடிவிற்கு சம்பந்தன் இணங்கினார்.
இதையடுத்து, இரவிரவாகவே மட்டக்களப்பில் இருந்து துரைராசசிங்கம் மற்றும் அம்பாறையிலிருந்து கோடீஸ்வரன் ஆகியோர் சம்பந்தனின் வீட்டுக்கு அழைக்கப்பட்டனர். கலையரசனிற்கு ஆசனம் வழங்குவதால் குழப்பமடைய கூடாதென கோடீஸ்வரன் சமரசம் செய்து அனுப்ப்பட்டார். மறுநாள், கலையரசனிற்கு நியமனம் வழங்கும்படி, செயலாளரிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தமது திட்டம் கச்சிதமாக நிறைவேறி விட்டது என்ற திருப்தியில் சுமந்திரன், சிறிதரன் தரப்பு அங்கிருந்து புறப்பட்டது. சுமந்திரன் கொழும்பு சென்றார். சிறிதரன் கிளிநொச்சி வந்தார்.
செயலாளரா விளையாட்டு பிள்ளையா?
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரை நெட்டிசன்கள் செல்லமாக “வெங்காயம்“ என்றுதான் கலாய்த்து வருகிறார்கள். அவரது செயற்பாடுகள்தான் அப்படி கலாய்க்க வைக்கிறது.
யாருமே தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டதாக ஒருவரை பக்கத்தில் உட்கார வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தியதில்லை. ஆனால், இன்று காலை தமிழ் அரசு கட்சி செயலாளர் அதை செய்தார். அம்பாறையை சேர்ந்த கலையரசனை உட்கார வைத்து, தேசியப்பட்டியல் நியமன அறிவிப்பை விடுத்தார்.
இதற்கு முன்னதாக, இன்று காலையில் சீ.வீ.கே.சிவஞானம் தொலைபேசியில் பலமுறை, செயலாளரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செயலாளர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, இரா.சம்பந்தனின் நேற்றைய முடிவை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தார். ஆனால் அதை செயலாளர் கணக்கிலெடுககவில்லை.
செயலாளர் விட்ட தவறுகள்
சம்பந்தன், சிறிதரன் கூட்டு, நச்சரித்ததால் கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குமாறு கூட்டமைப்பின் தலைவர் அறிவுறுத்தினால், அதை முறைப்படி நடைமுறைப்படுத்துவதே செயலாளரின் கடமை.
முதலில் கட்சித்தலைவருக்கு அறிவிக்க வேண்டும், பங்காளிக்கட்சிகளுடன் கலந்து பேச வேண்டும். அது எதுவும் நடக்காமல், தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவதாக செயலாளர் அறிவித்தார்.
அங்குசத்தை கையிலெடுத்த மாவை
இன்று மட்டக்களப்பில் செயலாளரின் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்து கொதிப்படைந்த மாவை சேனாதிராசா, தொலைபேசி அழைப்பேற்படுத்தி செயலாளரை ஒரு பிடிபிடித்தார். காரசாரமான பேச்சு.
கட்சித் தலைவரான என்னை கேட்காமல் எப்படி நீர் நியமனம் வழங்குவீர் என எகிறி விழுந்துள்ளார். இதை கேட்டு திக்குமுக்காடி திணறி பதிலளித்த செயலாளருக்கு, “வெங்காயம் மாதிரி பதில் சொல்லாதையும்“ எனவும் திட்டியதாக தகவல்.
அத்துடன், உடனடியாக தேசியப்பட்டியல் நியமனத்தை இடைநிறுத்த மாவை கண்டிப்பான உத்தரவிட்டார்.
உறுதியாக நின்ற பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள்
இதேவேளை, இன்று பங்காளிக்கட்சிகள் இரண்டின் தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பந்தன், மாவை தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்ல விருப்பமாக இருந்தார் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் கலையரசனை நியமித்தோம். அந்த கடிதம் அனுப்பப்பட்டு விட்டது என கூசாமல் பொய் சொல்லியிருந்தார்.
ஆனாலும், பங்காளிக்கட்சிகள் இரண்டின் தலைவர்களும் விடாப்பிடியாக, எம்முடன் பேசாமல் நீங்கள் நியமனம் வழங்க முடியாது. அதை நாம் ஏற்கவில்லை. இதுதான் உங்கள் நியமனம் என்றால், அடுத்து நாமும் சில நடவடிக்கையில் இறங்குவோம் என வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக சொல்லியுள்ளனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறிந்த இரா.சம்பந்தன், இன்று மாலை மாவை சேனாதிராசாவை தொலைபேசியில் அழைத்துள்ளார். இதன்போது வாய் கூசாமல் சம்பந்தன் ஒரு பொய் சொல்லியுள்ளார். “நீர் தேசியப்பட்டியல் நியமனத்தை பெற சம்மதித்தது எனக்கு தெரியாது“ என சம்பந்தன் பொய் சொல்லியுள்ளார்.
நேற்று தொலைபேசியில் பேசியதை மாவை நினைவூட்டினார். சம்பந்தனிற்கும் காரசாரமாக சூடு வைத்துள்ளார் மாவை.
இதை தொடர்ந்து, இன்று பின்மாலையில் இரா.சம்பந்தனிடம் இருந்து ஒரு கடிதம் மாவை சேனாதிராசாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தேசியப்பட்டியல் நியமன சர்ச்சையை நீங்களே தலையிட்டு, தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் அரசு கட்சியின் தலைமையை கைப்பற்றும் சுமந்திரன், சிறிதரனின் முயற்சி தற்போதைக்கு வெற்றியடையாது என்றே தோன்றுகிறது.