நாட்டிலுள்ள சுமார் 10,000 பாடசாலைகளும் இன்று ஆரம்பிக்கிறது.
சுமார் 6 மாத காலத்தின் பின்னர் அனைத்து வகுப்புக்களிற்கும் ஒரே தடவையில் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன. இதற்கான நடைமுறை ஒழுங்குவிதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 200 ஐ விட குறைந்தளவான மாணவர்கள் கல்வி கற்கும் சகல பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பிக்கின்றன.
இதேவேளை, 200 ஐ விட அதிகமான மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில், தரம் 5,10,11,12,13 மாணவர்களிற்கான கற்றல் செற்பாடுகள் எல்லா நாட்களிலும் இடம்பெறும்.
ஏனைய வகுப்புக்களிற்கு நாள் ரீதியாக வகுப்புக்கள் இடம்பெறும். அதாவது நாளொன்றுக்கு 7 விதமான வகுப்புக்கள் இடம்பெறும்.
இதன்படி இன்று தரம்1 மற்றும் 6ஐ சேர்ந்த மாணவர்களே சமூகமளிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் தரம் 2,7ஐ சேர்ந்த மாணவர்கள் சமூகமளிக்க வேண்டும். புதன்கிழமை தரம் 3,8ஐ சேர்ந்த மாணவர்கள் சமூகமளிக்க வேண்டும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தரம் 4,9 மாணவர்கள் சமூகமளிக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் விதமாகவே, ஒழங்கமைக்கப்பட்டுள்ளது.
தரம் 10,11, 12, 13ஐ சேர்ந்த மாணவர்களிற்கு காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும், ஏனைய வகுப்புக்களிற்கு வழக்கமான நேரப்படியும் வகுப்புக்கள் இடம்பெறும்.
பி.ப 1.30 மணிக்கு முடிவடையும் வகுப்புக்களிற்கு ஒரு இடைவெளி விடப்படும். பி.ப 3.30 மணிக்கு முடிவடையும் வகுப்புக்களிற்கு 2 இடைவெளிகள் விடப்படும். அதுவும் 20 நிமிடங்களிற்கு மேற்படாதவையாக இருக்கும்.
இன்று முதல் அனைத்து ஆசிரியர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளிற்கு அப்பால், மேற்பார்வை மதிப்பீடுகளை பரீட்சித்தல், சுகாதாரம் ஒழுங்கு பேணல் கருமங்களிலும் பொறுப்புக்களை கையேற்க வேண்டும்.
பி.ப 3.30 மணிவரையான நேரசூசி தவிர்ந்த ஏனைய அனைத்து ஆசிரியர்களிற்குமான நேரசூசி காலை 7.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரையாகும்.
கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் கடமைக்கு திரும்ப வேண்டும்.
பாடசாலை மட்ட கணிப்பீடுகள், கபொ.த உயர்தர வகுப்புக்களிற்கான முடிக்கப்படாத பரீட்சைகள் தவிர்ந்த வேறு எந்த பரீட்சைகளையோ, தவணைப் பரீட்சைகளையோ நடத்தக் கூடாது.
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் பாடசாலை செயற்பாடுகள் வழமைக்க திரும்பும்.