முதலை ஒன்றினால் தீண்டப்பட்டு மீட்கப்பட்ட மனிதத் தலை அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் தலை மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை மாலை கிராம மக்களின் உதவியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக வயல்வெளிகளுடன் இணைந்த வழுக்கைமடு கால்வாய்க்கு சென்று கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். இதன் போதே நபரை கால்வாயில் இருந்த முதலை இழுத்துச் சென்றுள்ளது.
இவ்வாறு குழிக்கச் சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல் சென்றவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.
பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட தலை கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற விசாரணை அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என சடலமாக மீட்கப்பட்டவரை சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை மஜிஸ்ரேட் நீதிவானின் உத்தரவிற்காக சடலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.