கொரோனா ஊரடங்கு உத்தரவால், வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலை போன்றவைகள் உருவானதும் கடுமையான மனஅழுத்தத்திற்கு பலரும் பாதிக்கப்ட்டுள்ளனர். அதிலும், குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல நோய்கள் உருவாக காரணமாகிவிட்டது.
உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவுக்கு உலுக்கியதில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் நோயாளிகளில் பலர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்கும், மருத்துவ உதவியினை பெறுவதற்கும் தயங்குகிறார்கள்.
அதனால், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சுவாசப் பகுதி நோய் கொண்டவர்கள, நோயின் வீரியமான தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துபோகும் சூழல் உருவாகிறது. அதே நேரத்தில் எந்த நோயும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்களையும் கொரோனாவுடன் சேர்ந்து, திடீர் மாரடைப்பும் தாக்குகிறது. இது பற்றிய ஆய்வுகள் எதுவும் பெரிய அளவில் இதுவரை நடத்தப்படவில்லை.
கொரோனா சாதாரண காய்ச்சல் மூலம் தொடங்குகிறது. இரண்டு மூன்று நாட்களில் இருமல் உருவாகிறது. ஒரு வாரம் கடக்கும்போது சுவாசப்பகுதியை தாக்குகிறது. இந்த நேரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் தோன்றுகிறது.
மேலும், காய்ச்சல் தொடங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு இதயம் தொடர்புடைய பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அது இதய தசைகளில் நீர்க்கட்டு உருவாகுவதாகவோ, திடீரென்று இதய செயல்பாட்டை முடக்குவதாகவோ அமையலாம்.
இந்த காலகட்டத்தில் உடலுக்கு முழு ஓய்வும், மனதுக்கு நிம்மதியும் தேவை. உடனடியாக மருத்துவ சிகிச்சையும் அவசியம். சிலருக்கு வென்டிலேட்டர் அல்லது டயாலிசிஸ் தேவைப்படும். இதில் 70 சதவீதம் நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இருக்காது என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ளவேண்டும்.
இதனால், கொரோனா பாதித்த நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடுகள் துரிதமாக நடக்கும். அப்போது ஸைட்டோகினின் போன்ற ரசாயனங்கள் உடலில் உற்பத்தியாகும். அவை வைரசை மட்டும் அழிக்காமல், சில தருணங்களில் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் ஆபத்தை உருவாக்கிவிடும்.
அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் இதயத்தில் உள்ள எய்ஸ் ரெஸிப்டேர்ஸ்களுடன் ஒட்டிப்பிடித்து மாரடைப்பை உருவாக்க காரணமாகிவிடுகிறது. சிலர் இதய தமனிகளில் தடைகள் ஏற்படாமலே இதய செயலிழப்புக்கு உள்ளாகியிருக்கவும் செய்கிறார்கள். இது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. உடற்பயிற்சி செய்யாதவர்கள் இதயநோய், சர்க்கரை நோய் போன்றவைகளோடு உடல்பருமனாலும் பாதிக்கப்படுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிக உடற்பயிற்சியும் இதய செயலிழப்புக்கு காரணம் என்பது பலருக்கும் தெரியாது.
உடலின் பொதுவான ஆரோக்கிய நிலை, வயது போன்றவைகளை கருத்தில்கொண்டு எந்த உடற்பயிற்சியை செய்யவேண்டும்? எவ்வளவு நேரம் செய்யவேண்டும்? என்பதை தீர்மானிப்பது அவசியம்.
உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே உங்களால் பேசமுடியவேண்டும். முணுமுணுத்தபடி ஒரு பாடலை மெதுவாக பாடவும் முடியவேண்டும். இவைகளை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டால் உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது.
உடற்பயிற்சியே செய்யாதவர்கள் திடீரென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. கனமான பொருட்களை தூக்குவது போன்ற செயல்களையும் செய்யக்கூடாது. அதனால் திடீர் இதய செயலிழப்பு உருவாகிவிடக்கூடும். ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை வந்த பின்பு பத்து நாட்கள் வரை கவனமாக இருக்கவேண்டும்.
அந்த காலகட்டத்தில் ஆரோக்கியமானவர்களைகூட ஐந்து முதல் பத்து சதவீதம் அளவுக்கு இதயநோய்கள் தாக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதனால் அந்த பத்து நாட்களும் பளு நிறைந்த வேலைகளை செய்யாமலும், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமலும் உடலை பாதுகாக்கவேண்டும்.