அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை நியமிப்பேன் என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி டிரம்ப்பும் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் களத்தில் உள்ளனர்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் தொடக்கத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸும் போட்டியில் இருந்தார்.
இவர் தமிழகத்தின் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை ஜமைக்கா நாட்டவர்.
கமலா ஹாரீஸ் 5 வயதான போது பெற்றோர் விவாகரத்து பெற்றுள்ளனர். தொடர்ந்து தாயாரின் அரவணைப்பிலேயே கமலாவும் சகோதரியும் வளர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரால பதவி வகித்த கமலா ஹாரீஸ் 2016-ல் அம்மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கும் தெரிவானார். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் எதிர்கால தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர் கமலா ஹாரீஸ்.
கமலா ஹாரீஸ், ஜோ பிடன் , பெர்னி சாண்டெர்ஸ் ஆகியோர்தான் ஜனநாயக கட்சியில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக போட்டியில் இருந்தனர்.
பின்னர் கமலா ஹாரீஸ், நிதி சிக்கலை முன்வைத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் களத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பிடன், தாம் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் கமலா ஹாரீஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பேன் என அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
இது அமெரிக்கா தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமலா ஹாரீஸ் துணை ஜனாதிபதியானால், இந்திய தமிழ் மற்றும் ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த, கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்கிற சரித்திரம் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பிடனின் இந்த அறிவிப்பு கறுப்பர் இன மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.




















