த.தே.கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பின்னடைவைச் சந்தித்தது உண்மைதான். மக்கள் ஒரு வித்தியாசமான பாதையை விரும்புகிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சர்ச்சைக்கு மத்தியில் நியமிக்கப்பட்ட தவராசா கலையரசன் தெரிவித்தார்.
சம்மாந்துறை தொகுதி வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் எம்.பியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். .
இது தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு கலையரசன் பேட்டியளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
த.தே.கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் இம்முறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். கட்சி மீதான வெறுப்பு, சில உறுப்பினர்கள் மீதான வெறுப்பு இப்படி பல காரணங்கள். மக்கள் ஒரு வித்தியாசமான பாதையை விரும்புகிறார்கள்.
இரு மாத காலத்துள் களத்திலிறங்கிய கருணா அணியினருக்கு சுமார் 30ஆயிரம் வாக்குகள் கிடைத்தது.
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார வேகம் அவர்களோடு ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது.
அவர்களது பொய்யான பரப்புரைகள் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த கல்முனை தமி ழ்பிரதேச செயலக தரமுயர்த்தல், பொத்துவில் கனகர்கிராம காணி விடுவிப்பு, தொட்டாச்சுருங்கி வட்டை மீட்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமையும் கட்சி மீதான வெறுப்பிற்கு காரணங்களாகும்.
இதனை மையமாக வைத்து சில தமிழ்இளைஞர்களும் புத்திஜீவிகளும் கருணாவுடன் இணைந்து செயற்பட்டமையும், எமது தேர்தல் பரப்புரையில் கருணாவுக்கெதிராக கூடுதலாக விமர்சிக்கப்பட்டமையும் காரணங்களாகும்.
இதே கோபாலகிருஷ்ணன் அணியினர் தமிழர் மகாசபை என்ற போர்வையில் போட்டியிட்டதனால் வாக்குகள் பிரிந்தன. அதே அணியினர்தான் இன்று கருணாவுடன் வேறு முகத்துடன் வந்தனர்.அதே பாணியில் வாக்குகளைப் பிரித்தனர் என்றார்.