அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, இந்திய தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரீஸை அறிவித்ததற்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் களத்தில் உள்ளனர்.
இந்த அதிபர் தேர்தலின் துவக்கத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸும் போட்டியில் இருந்தார்.
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரால பதவி வகித்த கமலா ஹாரீஸ் 2016-ல் அம்மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கும் தேர்வானார்.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் எதிர்கால தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுவர் கமலா ஹாரீஸ்.
கமலா ஹாரீஸ், ஜோ பிடன் , பெர்னி சாண்டெர்ஸ் ஆகியோர்தான் ஜனநாயக கட்சியில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக போட்டியில் இருந்தனர்.
பின்னர் கமலா ஹாரீஸ், நிதி சிக்கலை முன்வைத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் களத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் ஜோ பிடன், தாம் அமெரிக்க ஜனாதிபதி ஆனால் கமலா ஹாரீஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பேன் என அறிவித்தார். இது இப்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் முதல் முக்கிய வேலையே, தங்களது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதுதான்.
நீங்கள் ஜனாதிபதியாக பணியாற்றும்போது, பல கடினமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்போது, அதுதொடர்பாக எடுக்கப்படும் முடிவு மக்களை நேரடியாக சென்றடையும் என்பதை மறக்கக் கூடாது.
அப்போது நீங்கள் எடுக்கும் முடிவு இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் சம்பந்தப்பட்டதாகும்.
அந்த சமயத்தில் உங்களுக்கு சரியான ஆலோசனையை சொல்ல ஒருவர் தேவை. அவர்தான் துணை ஜனாதிபதி. தன்னலம் கருதாமல் பிற உயிர்களையும் கருத்தில் கொள்ளும்படியான ஒருவர்தான் வேண்டும்.
அந்த வகையில் ஜோ பிடனின் தேர்வு சரியானது. கமலாவை அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்ததன் மூலம் ஜோபிடன் போன்ற ஒருவரை அவரே அடையாளம் காட்டியுள்ளார்.
ஜோபிடனுக்கு உதவ சிறந்தவர் கிடைத்துவிட்டார். அவர் மூலம் அமெரிக்காவில் தற்போது இருக்கும் பிரச்சினைகள், ஆண்டாண்டாக இருந்து வரும் பிரச்சினைகள் ஆகியவற்றை சமாளிப்பதில் உதவுவார். செனட்டராக இருக்கும் ஹாரீஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். கொடுத்த பணியை எதிர்பார்ப்புக்கு மேல் பூர்த்தி செய்யக் கூடியவர்.
அரசியலமைப்பை பாதுகாக்கவும் அனைவரின் உரிமைகளுக்காக போராடுவதிலும் அவர் தனது பணியை செய்துள்ளார்.
அவரது சொந்த வாழ்க்கை என்பது நான் மற்றும் பலர் சந்தித்ததை போன்றதுதான். எனவே ஒருவர் எங்கிருந்து துணை அதிபர் பதவிக்கு வந்தார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இது உண்மையில் நம் நாட்டுக்கு நல்ல காலம். நாம் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.