இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை என்ற காரணத்தினால், சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் குற்றவாளிகளை நிறுத்தி தமிழ் மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அரச படைகளாலும் சிங்கள இன வெறியர்களாலும் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள். அந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தில் வணக்கம் செலுத்தி அரசியல் பயணத்தினை தொடர்கின்றோம்.
இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை என்ற காரணத்தினால் சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் குற்றவாளிகளை நிறுத்தி தமிழ் மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும். அதேபோல் பரிகார நீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு பொதுசன சர்வதேச வாக்கெடுப்பினை நடத்தி தமிழ்பேசும் மக்களின் விருப்பத்தினை அறிந்து அதனை செயற்படுத்தக்கூடிய வகையில் சர்வதேச நாடுகள் உதவிகள் செய்யவேண்டும் என்ற அடிப்படையிலும்.
இலங்கை அரசுடன் சர்வதேச நாடுகள் மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சுவார்த்தை இல்லை என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பயணிக்கும் எங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகின்றவர்கள் பயணிப்பார்களாக இருந்தால் அவர்களுடன் பயணிக்க தயாராக இருக்கின்றோம்.
ஆனால் ஒருசிலர் அரசாங்கத்துடன், சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுடன் அவர்கள் நிற்பார்களாக இருந்தால் தமிழ்தேசிய இனத்தின் பெயரில் வந்தாலும் கூட அவர்களுடன் எந்த ஒட்டும் உறவும் இருக்காது. இன்று ஒரு கொடுமையான சர்வதிகார இராணுவ ஆட்சி ஏற்படுத்தக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை வந்திருக்கின்றது.
தனித்து நின்று எவராலும் தடுக்க முடியாது சேரக்கூடியவர்கள் சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். இதற்கு மக்களை அணிதிரட்டி சர்வதேச நாடுகளின் உதவியினை பெற்று எங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுத்துவார் அதற்கு நாங்கள் எல்லோரும் துணை நிற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.