ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்க்ஷ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதன் பிரகாரம் நாட்டின் 18 ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற நாமல் ராஜபக்க்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி காலை விளையாட்டுத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
தேசிய விளையாட்டு அணி ஒன்றில் அங்கம் வகித்த மற்றும் தேசிய விளையாட்டு அணியொன்றுக்கு அணித்தலைவராக செயற்பட்ட ஒருவர் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்பது இலங்கை வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கடந்த 12 ஆம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்து கொண்ட நாமல் ராஜபக்க்ஷ அமைச்சரவை அந்தஸ்த்துக்கொண்ட அமைச்சராக விளங்குகிறார்.
றக்பி விளையாட்டில் சிறந்து விளங்கிய நாமல் ராஜபக்க்ஷ , 2004ஆம் ஆண்டு இலங்கை இளையோர் றக்பி அணியின் தலைவராகவும், 2005ஆம் ஆண்டு கல்கிஸ்ஸை பரி. தோமாவின் கல்லூரி றக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதுடன் 2013ஆம் ஆண்டு இலங்கை தேசிய றக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் .
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் , தேசிய இளைஞர்கள் சேவைகள் உள்ளிட்ட 8 நிறுவன அமைப்புக்கள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவின் கீழ் இயங்கும்.
நாட்டின் முதலாவது விளையாட்டுத்துறை அமைச்சராக வீ.ஏ.சுகததாச செயற்பட்டதுடன் இறுதியாக டலஸ் அழகப்பெரும கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.