போலியாக பொலிஸ் உடை அணிந்து, போலியான ரசீதை கொடுத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து பணம் வசூலித்துவந்த 20 வயது இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் கடுமையான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் கொரோனா கட்டுப்பாடு விதிகளும் அதிகமாகவே உள்ளது. விதிகளை மீறுவோர் மீது பொலிசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் 20 வயது இளம் பெண் ஒருவர் காவல்துறை அதிகாரி போல் உடை அணிந்து சாலையில் நின்றுள்ளார். விதிகளை மீறி அந்த வழியாக யாராவது வந்தால், உடனே வண்டியை நிறுத்தி அபராதம் விதித்து அவர்கள் கையில் சலானை கொடுத்து வந்துள்ளார்.
பார்ப்பதற்கு உண்மையான காவல்துறை அதிகாரி போலவே கறாராகவும், கம்பீரமாகவும் இருந்த அந்த பெண்ணை பார்த்து சிலர் பயந்து ஒதுங்கியும் போயுள்ளனர். இந்நிலையில் மஃப்டியில் அப்பக்கமாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பொலிசார் வந்த நிலையில் போலியாக வேஷமிட்ட பெண் மாட்டிக்கொண்டுள்ளார்.
தற்போது குறித்த பெண்ணைக் கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.