இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஹொட்டல் அறையில் 19 வயது இளம்பெண் ரத்தப்போக்கால் மரணமடைந்த விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞரும் அந்த இளம்பெண்ணும் பேஸ்புக் மூலம் ஒரு மாதம் முன்னரே அறிமுகமானதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எர்ணாகுளம் நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் அறையிலேயே ரத்தப்போக்கால் மரணமடைந்த நிலையில் இளம்பெண் மீட்கப்பட்டார்.
பேஸ்புக் மூலம் அறிமுகமான இருவரும், பின்னர் அலைபேசியில் பேசி நெருக்கமாகியுள்ளனர். இது காதலாக மாறவே, ஒருமுறை நேரில் சந்திக்க கொச்சி நகருக்கு அழைத்துள்ளார் அந்த இளைஞர்.
இதனையடுத்து, வேலைக்கான நேர்முகத்தேர்வு என பெற்றோரிடம் கூறிய இளம்பெண் சம்பவத்தன்று கொச்சி நகருக்கு சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் ஹொட்டல் ஒன்றில் நேரம் செலவிட்டுள்ளனர். கொச்சி, வைப்பின் பகுதியை சேர்ந்த 25 வயது கோகுல் என்பவரே தற்போது கைதாகியுள்ளார்.
இவர் மீது ஐபிசி 304 என்ற பிரிவில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். இளம்பெண்ணின் அனுமதியுடனே உறவில் ஈடுபட்டதாக கோகுல் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
வன்கொடுமைக்கான அடையாளங்கள் ஏதும் இல்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் உடற்கூறு ஆய்வறிக்கை வெளியானால் மட்டுமே தெளிவான தகவல் கிடக்கும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஹொட்டல் அறையில் வைத்தே இளம்பெண் ரத்தப்போக்கால் அவதிப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் சேர்ப்பிக்க சுமார் ஒரு மணி நேரம் தாமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பத்தாருக்கு தெரியவரலாம் என்ற பயம் காரணமாகவே இருவரும் உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாமல் தாமதித்ததாக கூறப்படுகிறது.
இருவரின் அலட்சியமே இளம்பெண் மரணமடைய காரணமாக தற்போது கூறப்படுகிறது.
கொலை வழக்கில் தற்போது கைதாகியுள்ள கோகுல் மீது போஸ்கோ வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இளம்பெண் ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கவும், பின்னர் பிரச்சனை வலுத்த நிலையில் அதே பெண்ணை இவர் திருமணமும் செய்துள்ளார்.
ஆனால் நான்கு மாதத்திற்கு பின்னர் சண்டையிட்டு இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.



















