“போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, முள்ளிவாய்க்கால் என்ற புனித பூமியை தங்களது சுய அரசியலுக்காகக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவாலயம் சென்று சில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பில் இன்று (16) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் போலித் தேசியம் பேசும் சில அரசியல் கட்சிகள் தாம் முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியபிரமாணம் செய்கின்றனர் எனக் கூறி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் என்பது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளின் நினைவாக, வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகள் ஒன்று கூடி நினைவுகூரும் ஒரு புனிதமான பிரதேசமாகும். அவ்வாறான புனித பிரதேசத்தில் தங்களது சுயநல அரசியலுக்காக அந்த முள்ளிவாய்க்கால் மண்ணைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக மக்களை முட்டாளாக்கி வரும் செயற்பாடாகவே இதைப் பார்க்கின்றேன்.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தற்போது போலி தேசியம் பேசுபவர்கள் எங்கு இருந்தார்கள்? இவர்கள் மக்களுடன் மக்களாக இருக்கவில்லை. மாறாக தங்களது பணியிலும் வெளிநாடுகளிலும் இருந்துவிட்டு இப்போது முள்ளிவாய்க்காலில் வந்து தங்களது போலித் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர் எனக் கூறும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள சத்தியப்பிரமாண நிகழ்வில் இலங்கை அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுக்கவுள்ளனர்.
குறிப்பாக அரசியலமைப்பின் இரண்டாம் உறுப்புரையில் இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, ஒற்றையாட்சியைப் பேணிப் பாதுகாப்போம் என்று அவர்கள் உறுதி உரை எடுக்க உள்ளனர்.
பின்னர் இங்கு மக்கள் மத்தியில் பொய்களைக் கூறி அவர்களை மறுபடியும் ஏமாற்றும் படலத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்தபோது ஐந்து வருடங்களையும் அந்த சபையை அர்த்தமற்ற சபையாக்கியவர் விக்கினேஸ்வரன். இப்போது மீண்டும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஐந்து வருடங்களை வீணாக்கவே அவர் தெரிவாகியுள்ளார்.
அதே போல இன்னொரு தரப்பு சர்வதேசம் சர்வதேசம் என்று கூறி வருகின்றது. அந்த சர்வதேசத்தின் அனுசரணையைப் பெறுவதற்கு இவர்களிடம் என்ன வழிமுறைகள் இருக்கு என்று இன்றுவரை தெளிவாக அவர்கள் குறிப்பிடவில்லை.
எனவே, போலித் தேசியம் பேசி மக்களை முட்டாளாக்கும் இவ்வாறான நபர்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.” என்றார்.