லடாக் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ்-பாஜக இடையேயான மோதல் நீடித்து வருகிறது. மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்தான் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவ காரணம் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், நாட்டின் 74 சுதந்திர நாளையொட்டி நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுத்தவர்களுக்கு இந்திய இராணுவம் பொருத்தமான பதிலடி கொடுத்தது என்றார். மேலும் எல்லைப் பகுதியில் யார் ஊடுருவ முயன்றாலும், இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, லடாக் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக கூறியிருந்தார். மேலும், இந்திய ராணுவத்தின் திறன் மற்றும் வீரத்தின் மீது பிரதமரைத் தவிர மற்ற அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர். யாருடைய கோழைத்தனத்தால் இந்திய நிலத்தை சீனா எடுத்துக் கொண்டது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய பொது செயலாளர் ராம் மாதவ், செங்கோட்டையில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, நமது ராணுவ வீரர்களின் தியாகங்களை பாராட்டிப் பேசியதாக கூறியுள்ளார். ஆனால் அந்த உரையைக் கேட்ட பின்னும் இது போன்ற கருத்தை சிலர் தெரிவிப்பது, தேச பாதுகாப்பிற்கு எவ்வளவு எதிரானது என்பது குறித்து தீர்மானிக்க வேண்டிய நேரமிது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.