பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களிற்குள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரின் தம்பி குழப்பத்தை ஏற்படுத்தினார். அத்துடன், வடக்கு தலைமை எடுக்கும் முடிவுகளை அப்படியே கிழக்கில் அமுல்ப்படுத்த முனைவதே கிழக்கில் கட்சியின் பின்னடைவிற்கு காரணம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டகுழு கூட்டத்தில் தெரிவிக்கப்ப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. மதிய போசணத்துடன், சுமார் 6 மணித்தியாலத்திற்கு மேலாக கூட்டம் நீடித்தது.
மாவட்டகுழுவில் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர். கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதன்போது, கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராயப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் தமது கருத்தை தெரிவித்தனர்.
முன்னாள் எம்.பி, ஸ்ரீநேசன் நேரடியாகவே கட்சி செயலாளரின் தம்பி தங்கவேலு பற்றி குற்றம்சாட்டினார்.
கடந்த பொதுத்தேர்தலில் தங்கவேலு போட்டியிட தலைகீழாக நின்று பார்த்தார். முடியவில்லை. தனக்கு ஆசனம் கிடைக்காததற்கு காரணம் முன்னாள் எம்.பி ஸ்ரீநேசன் என அவர் தவறாக புரிந்து கொண்டு, கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீநேசனிற்கு எதிராக அவர் செயற்பட்டது ஊரறிந்த இரகசியம்.
ஸ்ரீநேசன் அதை சுட்டிக்காட்டி, தனது விருப்பிலக்கத்திற்கு புள்ளடியிட வேண்டாமென தங்கவேலு பல இடங்களில் பிரச்சாரம் செய்ததை சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அதை ஆமோதித்து, தன்னிடம் நேரடியாகவே வந்து, ஸ்ரீநேசனிற்கு வாக்களிக்க வேண்டாமென தங்கவேலு கேட்டதை அம்பலப்படுத்தினார்.
வடக்கு, மற்றும் கிழக்கு தலைமைகள் தமக்கு விருப்பமான முடிவையும், வேட்பாளர்களையும் நியமிப்பதை நிறுத்த வேண்டும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்து வேட்பாளர்களை நியமித்து விட்டு செல்ல விட்டால், மாகாணசபையிலும் மண்கவ்வுவோம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
பெண் வேட்பாளர் விடயத்தில் சுமந்திரன் நடந்து கொண்டது, கருத்து தெரிவித்தது ஆகியவையும் பின்னடைவை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டினர். இறுதியில் மட்டக்களப்பில் பெண் வேட்பாளர் ததேகூவில் இல்லாமல் போக, அவளுக்கு ஒரு வாக்கு திட்டத்தை அரச கட்சி ஆதரவாளர்கள் முன்னெடுத்ததையும் சுட்டிக்காட்டப்பட்டது.
எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும்- குறிப்பாக விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மக்களை கோபமடைய செய்தது என்றும் சுட்டிக்காட்டினர்.
வாகரை பிரதேசசபை தவிசாளர் கருத்து தெரிவித்தபோது, வடக்கில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்தார்கள். அது, அவர்கள் தமிழ் தேசியத்தின் பால் தொடர்ந்து பற்றுறுதியுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 எம்.பிக்களும் மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கருத்து தெரிவித்தபோது, தான் அம்பாறையின் பல பகுதிகளிற்கும் சென்று மக்களை சந்தித்தபோது, இம்முறை உங்களிற்கு ஒரு இடைவேளை தரப்போகிறோம் என சொன்னதாகவும், கூட்டமைப்பு தனது தவறுகளை திருத்தித் கொண்டு அடுத்ததேர்தலிற்கு வரும்படியும், அடுத்த தேர்தலிலும் தவறுகளை திருத்தாமல் வந்தால், நிரந்தரமாகவே உங்களிற்கு விடைதந்த விடுவோம் என தெரிவித்தாகவும், அத்துடன், கல்முனை பிரதேசசெயலக விடயத்தில் எம்.ஏ.சுமந்திரனின் நடவடிக்கையால் மக்கள் கோபத்தில் உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். கணக்காளர் நியமிக்கப்படுவார் என ரணில் சொன்னதாக ஒரு பொய் வாக்குறுதி தந்து தம்மை ஏமாற்றியதாக அந்த மக்கள் கருதுகிறார்கள் என்றார்.
ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்தது பற்றிய விமர்சனம் வெளியில் வைக்கப்பட்டபோதும், அதற்கு பதிலளிக்காமல் விட்டது தவறு என்றார் ஒருவர்.
கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது? அந்த அறிக்கையின்படி எதையாவது உருப்படியாக செய்யாமல், இப்பொழுது தேர்தல் தோல்வி பற்றி ஆராய எதற்கு கூட்டம் போடுகிறீர்கள். இந்த கூட்டங்களால் ஒரு பயனுமில்லை. வந்து பொழுது போக்காக கதைத்து விட்டு, சாப்பிட்டு விட்டு செல்வோம். அவ்வளவுதான் என மாநகரசைபை உறுப்பினர் மதன் காரசாரமாக தெரிவித்தார்.
அனைத்து கருத்துக்களையும் கேட்ட செயலாளர், 29ஆம் திகதி மத்தியகுழு கூட்டத்தில் இந்த கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடுவோம். அந்த கூட்டத்தின் பின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய்வோம் என தெரிவித்து முடித்தார்.