உமிழ்நீரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் புதிய முறைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை பொறுத்தவரை வளர்ந்த நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், அமெரிக்காவில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்வதால்தான் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் உமிழ்நீர் மாதிரிகளை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக ‘Yale School of Public Health’ நிறுவனத்திற்கு இந்த அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. உமிழ்நீர் மாதிரி மூலம் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை நல்ல பலனை தரும் பட்சத்தில், நாடு முழுவதும் இதனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் அமெரிக்காவில், இதுபோன்ற புதிய முயற்சிகள் இன்னும் நல்ல பலனை தரும் என பலரும் நம்புகின்றனர். இதன் மூலம் ஏராளமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 55,29,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,72,606 பேர் உயிரிழந்துள்ளனர்.