புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க செய்வதற்கு தமிழ் புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாதென மக்கள் எண்ணக் கூடாது எனவும் சிறப்பாக செயல்படாவிட்டால் எம்மால் வெற்றி கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமனம் கிடைக்கப்பெற்றமையானது நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கிடைக்கப்பெற்ற சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ற தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்கு முதலிடம் அளித்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வரை உலகத்தில் காணப்படும் எந்த ஒரு நாட்டுக்கும் வளர்ச்சி என்ற ஒன்றைப்பற்றி நினைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் காணப்படும் பிரதான சவாலாக அமைவது பிரிவினைவாதமாகும்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டது மீண்டும். இதுபோன்ற அச்சுறுத்தல் ஏற்படாது என்று எண்ணலாம் ஆனாலும் அந்த அமைப்பில் காணப்பட்ட 12 ஆயிரத்து 242 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும்,
ஈழ வாதத்திற்கு ஆதரவளிக்கும் குழுவினரால், புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களை உபயோகித்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்க செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.