9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது. நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.
அதையடுத்து, புதிய சபாநாயகர் முன்னிலையில், பொதுத் தேர்தலில் தெரிவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதிப்பிரமாணம் ஏற்கவுள்ளனர்.
பின்னர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதி தலைவர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டவுள்ளனர்.
9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஆளும் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தனவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியயை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறை நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக 81 தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 12 பேர் பெண் பிரதிநிதிகளும் அடங்குகின்றனர்
இதனையடுத்து மீண்டும் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகும்.
ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார்.
அதற்கிணங்க புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொள்ளவுள்ள அதிதிகள் இன்று பிற்பகல் 2. 15 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2.25 மணியளவில் அனைத்து அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆசனத்தில் அமரவுள்ளனர். 2.30 மணியளவில் புதிய சபாநாயகரின் வருகை இடம்பெறும்.
பிற்பகல் 2 .35 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அவரது பாரியாரும் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வருகை தருவர்.அதனையடுத்து 2.40 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது பாரியாரும் வருகை தருவர்.
அவர்களை சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் உத்தியோகபூர்வமாக வரவேற்பர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் ஜெய மங்கள கீதம் இசைக்கப்பட்டு ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட உள்ளது.
அதனையடுத்து பிரதமர்,சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதனையடுத்து ஜனாதிபதியின் தலைமையில் சபை அமர்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டதன் பின்னர் பாராளுமன்றம் பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படும்.
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு சிறப்பாக இடம் பெறுவதுடன் இராணுவ அணிவகுப்பு,மோட்டார் வாகன பவனி ஆகிய நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை, நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு இடம்பெறவுள்ளது. ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் அபே ஜனபல கட்சியின் சார்பிலும் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் அக்கட்சிகள் இதுவரை பெயர்களை அறிவிக்காத நிலையில் அவர்களுக்கான ஆசனம் வெறுமையாகவே காட்சியளிக்கும்.
அந்த இரு கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு அதற்கான வர்த்தமானியையும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.