ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மேலும் 15 ஆண்டுகள் இருப்பதற்காக மனதை தேற்றிக் கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
ஸ்ரீலங்காவின் வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம். இதனை 1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துடன் மாத்திரமே ஒப்பிட முடியும்.
எனினும் கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் 1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை விட பலமானது.
கோட்டாபயவின் கீழ் 15 ஆண்டுகள் வாழ மனதை தேற்றிக்கொள்ள வேண்டும் என நான் 2009ஆம் ஆண்டு கூறினேன். அது இன்று நிஜமாகியிருக்கிறது.
2015ஆம் ஆண்டு தோற்டிக்கப்பட்டது மகிந்த ராஜபக்சவின் திட்டமே அன்றி கோட்டாபயவின் திட்டம் அல்ல. மகிந்தவின் அரசாங்கத்தை கவிழ்த்தது போல கோட்டாபயவின் அரசாங்கத்தை கவிழக்க முடியாது.
இன்று கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான மாற்று சக்தியை கண்களுக்கு எட்டிய தூரம் வரை காணமுடியவில்லை.
இதனால், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் வெற்றிகளை தீர்க்கமாக ஆராயந்த பின்னரே அரசாங்கத்திற்கு எதிராக வாயை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.