ஒரு நாடு ஒரு சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்துகின்றார் என்பது தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்கு வாக்குறுதியளித்தப்படி சுபீட்சமான நாட்டையே உருவாக்க வேண்டும். ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற விரும்புகின்றனர். புதிய அரசியலமைப்பையும் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறுகின்றனர்.
19இல் உள்ள நல்ல விடயங்களையும் அகற்ற விரும்புகின்றனரா? அல்லது அரசாங்கம் அவர்களுக்குத் தவறானது என கருதும் விடயங்களை அகற்ற முற்படுகின்றனரா என தெளிவில்லாதுள்ளது. இதற்கு ஒரு வரைபை முன்வைக்குமானால் அதனைத் தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஒரு சமுதாயத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களை வைத்து ஒரு பூச்சாண்டி காட்டப்பட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதேபோன்று அதற்கு உதவியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். மாறாக ஒரு சமுதாயத்தின்மீது இன வெறுப்பைத் தூண்டும் பறையை அடிக்கக் கூடாது.
எமது நாடு பல்வகைத்தன்மை கொண்ட நாடு. பல இன, மொழிகள் உள்ளன. இவர்களுக்கென தனியான திருமணச் சட்டங்கள் மற்றும் சொந்த விவகாரங்களைப் பார்த்துக்கொள்ள நாம் வாய்ப்பளித் துள்ளோம்.
அவ்வாறான பல்வகைமையினை அகற்ற வேண்டும் என்பது ஆபத்தானது. அது சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தும். அனர்த்தமிகு நிலைக்குக் கொண்டுசெல்லும். அவ்வாறான நிலை ஏற்படக் கூடாதென எதிர்பார்க்கிறோம் என அவர் உரையில் தெரிவித்துள்ளார்.