எங்கு திரும்பினாலும் மாஸ்க் அணிந்த மக்கள், பொருட்களை வாங்கிக் குவிக்க கடைகள் முன் திரண்ட மக்கள், ஊரடங்கு, என்பது போன்ற விடயங்களையே பார்த்த நிலையில், பிரித்தானியர் ஒருவர், கொரோனா குறித்த எந்த பரபரப்பும் இல்லாமல் காணப்படும் நாடு ஒன்றைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.
பிரித்தானிய வராலாற்றாளரும், எழுத்தாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவருமான Dominic Sandbrook ஒரு நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ளோர் மாஸ்க் அணியாமல், எந்த பரபரப்பும் இன்றி அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் நடமாடுவதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார் அவர்.
காபி ஷாப்களில் மக்கள், பூங்காக்களில் மக்கள், உணவகங்களில் மக்கள் என மக்கள் சாதாரணமாக எந்த பரபரப்பும் இன்றி நடமாடியுள்ளனர். அந்த நாடு ஸ்வீடன்… ஸ்வீடன் மருத்துவரான Anders Tegnell என்னும் தொற்று நோயியல் நிபுணர், தன் நாட்டினருக்கு கொடுத்த ஆலோசனைகளால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக விமர்சனங்களுக்குள்ளானார்.
கொரோனா பரவத்தொடங்கிய ஆரம்ப முதலே, கட்டாய ஊரடங்கு என்பது நேரத்தை வீணாக்குவது என அழுத்தந்திருத்தமாக கூறிவந்தார் அவர்.
ஸ்வீடனைப் பொருத்தவரை, கொரோனாவுக்கெதிரான திட்டம் இதுதான், புத்தியை பயன்படுத்தி நடந்துகொள்ளுங்கள், கைகளைக் கழுவுங்கள், பொதுப்போக்குவரத்தை தவிருங்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் அவ்வளவுதான்…
பள்ளிகளை மூடுவது அர்த்தமற்ற செயல், எல்லைகளை மூடுவது அபத்தம், மாஸ்க் நேரத்தை வீணடிக்கும் செயல், கடைகளும் உணவகங்களும் திறந்துதான் இருக்கவேண்டும்.
மற்ற நாடுகளெல்லாம் நாட்டை முடக்குவது குறித்து கூறி, Tegnellஇடம் கருத்து கேட்டபோது, அவர்கள் பயப்படுகிறார்கள், பயப்படுவது ஸ்வீடன் நாட்டவர்களின் பழக்கமல்ல என்றார்.
ஆனால், ஒரே ஒரு பிரச்சினை ஏற்பட்டது… முதியோர் இல்லங்களை கவனிக்கத்தவறிவிட்டது ஸ்வீடன்! 100,000 பேருக்கு 57 பேர் உயிரிழந்திருந்தார்கள், ஆனால் பக்கத்து நாடுகளான பெல்ஜியத்தில் 87 பேர், ஸ்பெயினில் 62 பேர், பிரித்தானியாவில் 62 பேர், இத்தாலியில் 58 பேர், அந்த நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வளவையும் பார்த்தபிறகு, அப்படியானால், நாம் பிரித்தானியாவில் எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியானவைதானா என கேள்வி எழுப்புகிறார் Dominic Sandbrook!