இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் மனைவி பிரியங்கா (35).
கணவரை பிரிந்த பிரியங்கா தனது 12 வயது மகனுடன் தமிழகத்தின் திருவள்ளூரில் வசித்து வந்தார்.
அங்கு டோமினிக் ப்ரோகான் (40) என்பவர் நாய்ப் பண்ணை வைத்திருக்கிறார். நாய்களைப் பராமரிக்கும் வேலையை பிரியங்கா செய்துவந்தார்.
இந்த நிலையில் பிரியங்காவை போனில் தொடர்பு கொண்டு பேசி வந்த அவர் சகோதரர் விக்ரமால் அவரை திடீரென தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து பொலிசில் அவர் புகார் கொடுத்தார்.
இது குறித்த பொலிசாரின் விசாரணையில் பிரியங்கா கொலை செய்யப்பட்டதும் அவர் சடலம் நாய்ப்பண்ணையில் புதைக்கப்பட்டதும் தெரியவந்தது.
அவரின் சடலத்தை தோண்டியெடுத்த பொலிசார் கொலை தொடர்பாக மெல்வின் என்பவரை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், பிரியங்காவை மெல்வின், விஜய், ஆனந்தன் ஆகியோர் சேர்ந்து கொன்றுள்ளனர்.
நாய்ப் பண்ணை அருகே சொகுசு பங்களாவில் விஜய் என்பவர் குடியிருக்கிறார். அவரின் வீட்டுக்கு வந்த பிரியங்காவிடம் விஜய் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். பிரியங்கா தப்ப நினைத்த நிலையில் அவரை நீச்சல் தொட்டிக்குள் தள்ளிவிட்டு மூச்சுத்திணறி கொன்றுள்ளனர்.
பின்னர் சடலத்தை புதைத்துள்ளனர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இருவரையும் தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.