ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விராட் கோஹ்லி 7 ஆண்டுகளாக தலைவராக உள்ளார்.
இந்த ஏழு ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆர்.சி.பி. அணியை பிளே- ஓப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு முறை கூட சம்பியன் பட்டமும் வென்றதில்லை.
கடந்த ஏழு பருவக்காலங்களில் விராட் கோஹ்லி தலைவராக செயற்பட்டுள்ளார். அவரது தலைமையில் ஆர்.சி.பி. அணி முறையே 5 ஆம், 7 ஆம்,3 ஆம், 2 ஆம், 8 ஆம், 6 ஆம், 8 ஆம் இடங்களை பிடித்திருந்தது.
இதனால் ஆர்.சி.பி. அணித்தலைவராக விராட் கோஹ்லி நீடிப்பாரா? என்ற கேள்வி கூட எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து ஆர்.சி.பி. அணி நிறுவனத்தலைவர் சஞ்சீவ் சுரிவாலா கூறுகையில்,
விராட் கோஹ்லி இந்திய அணித்தலைவராக உள்ளார். மிகவும் அதிக ரசிகர்களை கொண்டவராகவும் உள்ளார். நாங்கள் விராட் கோஹ்லியை விரும்புகிறோம்.
விளையாட்டை பொறுத்த வரைக்கும் சில நேரங்களில் தோல்வியடையலாம், சில நேரம் வெற்றி பெறலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் விராட் கோஹ்லியின் சாதனையை மறந்துவிட முடியாது. ஆர்.சி.பி. அணி கடந்த 7 ஆண்டுகளில் 2 தடவைகள் மாத்திரமே பிளே ஓப் சுற்றுக்கு நுழைந்துள்ளது.
ஒரு சிறப்பான பதினொருவர் அணியை உருவாக்க முடியும் என்ற எண்ணத்தில் 21 வீரர்களை கொண்டுள்ளோம். ஒவ்வொரு வீரர்களும் விளையாடும் பதினொருவரில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அர்த்தமுள்ள பங்கை அளிப்பார்கள் என கூறியுள்ளார்.