13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மாகாண சபை முறையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் 13வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு முதல் முறையாக யோசனை முன்வைத்துள்ளார்.
மாகாண சபைகள் நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார சுமை எனவும் அவற்றால் நாட்டுக்கு எவ்வித சேவையும் நடந்ததில்லை எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக இந்தியாவின் தலையீட்டின் அடிப்படையில் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையில் மாகாண சபைகள் முறை ஏற்படுத்தப்பட்டது.
இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாண சபை முறையை ஒழிக்க வேண்டும் என சிங்கள தேசியவாதிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
மாகாண சபைகள் மூலம் நாட்டில் ஓரளவுக்கு அதிகாரங்கள் 9 மாகாணங்களுக்கு பகிரப்பட்டுள்ள போதிலும் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இதுவரை மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக 13வது திருத்தச் சட்டம் நீக்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மை அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த சட்டத்தை நீக்க வேண்டாம் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய உயர்ஸ்தானிகர், தம்மை அண்மையில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இரண்டு நாடுகளின் தலையீடுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கைகளை நீக்குவது எளிதான காரியமல்ல எனவும் 13வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால், அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.