புதிய அரசாங்கம் மேற்கொள்ள உள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெறவுள்ளார் என தெரியவருகிறது.
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜயந்த கெட்டகொட தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமையை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்க முடியாது.
இந்த நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் மேற்கொள்ளப்பட உள்ள அரசியலமைப்புத் திருத்தத்தில் இரட்டை குடியுரிமை தொடர்பான ஷரத்தில் திருத்தங்களை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இது சம்பந்தமான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், பசில் ராஜபக்ச தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட உள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
இதன் பின்னர் பொருளாதாரம் சம்பந்தமான விசேட அதிகாரங்களை கொண்ட அமைச்சு பதவியை பசில் ராஜபக்சவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தாலும் பசில் ராஜபக்சவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள பொருளாதாரம் சம்பந்தமான செயலணிக்குழுவின் தலைவராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.