பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1.62 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெற்றது.
இறுதியாக 1,14,206 பேர் தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்த நிலையில், தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ரேண்டம் எண்களை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 10ம் தேதிக்குள் பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்தார். செப்டம்பர் 17ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்தார். மேலும், எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும், தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைவரையும் தேர்ச்சி பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



















