கால இழுத்தடிப்புக்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (27) பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.
“தமிழ் மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது.
ஜனநாயகத்துக்கு அப்பால் ஒரு இனநாயகமாக பரிணமித்துக்கொண்டிருக்கின்ற இந்த அவையில் ஜனநாயகத்தின் உண்மைத் தன்மையை எதுவித பேதமுமின்றி தாங்களும் இந்த சபா பீடமும் பேணவேண்டும்.
போரின் காரணமாக இன அழிப்பின் ஒடுக்குமுறைகளாலும் வடுக்களை சுமந்து நிற்கின்ற மக்களாகிய நாங்கள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் எமது குரல்களை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
இங்குள்ள அனைவரும் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்தே பிரச்சினையின் தீர்வுக்கான ஆரப்பப் படிகள் ஆரம்பமாகின்றன.
மாறாக பிரச்சினையின் மூலத்தையும் பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் அதற்கான நீதியான தீர்வு எது என்பற்றையும் மறைத்து, மறந்து வெறுமனே மேம்போக்கான நிலையில் பிரச்சினையை அணுகுவது ஒருபொழுதும் பிரச்சினைக்கான தீர்வினைக் கொண்டுவரப்போவதில்லை.
தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது.
மீண்டும் மீண்டும் ஜனநாயக தேர்தல்கள் மூலம் எமது மக்கள் வழங்கிய தீர்ப்புக்களின் ஊடாக பொறுப்புக்கூறலும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் அணுகப்பட வேண்டும்” என்றார்.



















