காதலை எதிர்த்தமைக்காக தனது தந்தையை விசம் வைத்து கொலை செய்ய முயன்ற 18 வயதான யுவதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது.
மாத்தறை மேலதிக நீதவான் இசுறு நெத்தி குமார முன்னிலையில் யுவதி முற்படுத்தப்பட்டபோது, அவரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
18 வயதான யுவதிக்கு காதல் தொடர்பு இருந்தது. இதை தந்தையார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். அண்மை நாட்களாக தந்தை கடுமையான கண்டிப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த யுவதி, தந்தையை கொல்ல முடிவு செய்திருந்தார்.
சில தினங்களின் முன்னர் தந்தைக்கு இரவு உணவு தயாரித்த யுவதி, மீன் பொரித்து அதில் மிளகாய் சேர்த்து, அதில் விசம் கலந்து தந்தைக்கு உண்ண கொண்டு வந்துள்ளார். தந்தை உண்ண ஆரம்பித்தபோது, எதேச்சையாக தாயாரும் அங்கு வந்து, மகளின் கைவண்ணத்தை சுவைக்கப் போவதாக கூறி, மீனை உட்கொள்ள முயன்றுள்ளார்.
இதன்போது, பதறிய யுவதி தாயாரை தடுத்து, உணவில் விசம் கலந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த களேபரத்தில் தந்தையும் மீனை உண்ணாமல் இருந்ததால் ஆபத்தின்றி தப்பித்தார்.
உடனடியாக கும்புறுபிட்டி பொலிஸ் நிலையத்தில் தந்தை, தமது மகள் மீது முறைப்பாடு செய்தார். இதையடுத்து சோதனை செய்த பொலிசார் விசப் போத்தலுடன் யுவதியை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட யுவதிக்கு நீதவான் அறிவுரை கூறினார். பின்னர் எச்சரிக்கை கலந்த பிணையில் விடுவிக்கப்பட்டார். 500,000 ரூபா தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2021 ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முற்பட உத்தரவிட்டார்.