சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் சீனாவின் கட்டுமாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள சீன ஒப்பந்தக்காரரை அமெரிக்கா கடந்த வாரம் தடைப்பட்டியலில் சேர்த்திருப்பது ஆசிய நாடுகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இராஜதந்திர பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் சீனா மோர்னிங் போஸ்ட் செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.
மலேசியாவின் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கிழக்கு கடற்கரை தொடருந்து இணைப்பு, இலங்கையில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் போர்ட் சிட்டி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு வெளியே ஒரு புதிய 10 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான வானூர்தி நிலையம் ஆகியவை சீனா கொம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியால் (சி.சி.சி.சி) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீன நிறுவனத்தின் பிராந்திய இருப்பு அளவைப் பொறுத்தவரை, எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கண்டறியமுடியும் என்று இராஜதந்திர பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கையில் சீன நிறுவனமான சி.சி.சி.சியின் இருப்பு கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
2018ம் ஆண்டில் நியூயோர்க் டைம்ஸ் அறிக்கையில், நிறுவனத்தின் துணை நிறுவனமான சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம், சுமார் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரத்திற்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்து.
எனினும் நியூயோர்க் டைம்ஸின் செய்தியை சீனாவின் சி.சி.சி.சி மற்றும் இராஜபக்சர்கள் தரப்பு மறுத்திருந்தது.
அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் கடந்த புதன்கிழமை தடைவிதிக்கப்பட்ட சீனாவின் 24 நிறுவனப்பட்டியலில் ஐந்து சி.சி.சி.சி துணை நிறுவனங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.